×

தமிழக ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் 12ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19ம் தேதி தாக்கல் செய்கிறார். 20ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், 21ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், வளர்ச்சி ஆணையர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆளுநரின் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் பட்ஜெட் குறித்தும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தேர்தல் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஸ்பெயினில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கட்சியினர் தெரிவித்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். அதனை முதல்வர் கவனமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.

உத்வேகம் அளித்த முதல்வரின் கருத்து- உதயநிதி ஸ்டாலின் டிவிட்

திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் விதமாக, திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கடந்த ஒரு வாரமாக தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்து, தேர்தல் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறோம். இந்த கலந்தாலோசனைக் கூட்டங்கள் நாளையுடன்(இன்றுடன்) நிறைவடையவுள்ள சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிலிருந்து காணொலி காட்சி வாயிலாக இக்குழு மேற்கொண்டு வரும் பணிகளின் நிலை-திமுக நிர்வாகிகள் கூறிய கருத்துகள், அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்தியா கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கான பணிகளை வேகப்படுத்த, நம் முதல்வர் கூறிய கருத்துகள் உத்வேகம் அளித்தன. நாடும் நமதே, நாற்பதும் நமதே. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

The post தமிழக ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Chief Minister ,M.K.Stal ,Spain ,Chennai ,Tamil ,M. K. Stalin ,Tamil Nadu Budget Session ,RN ,Ravi ,Dinakaran ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...